Find us on Google+ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Tuesday, 27 December 2011

பிரிட்டனா பிரேசிலா ? யார் வளர்ச்சி? யார் வீழ்ச்சி?


         இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சியில், பிரிட்டனை, பிரேசில் முந்திவிட்டது எனவும், 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு, இந்தியா வந்துவிடும் எனவும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட உலகின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில், இதுவரை ஆறாவது இடத்தில் இருந்த பிரிட்டனை, பிரேசில் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தாண்டில் 10வது இடத்திலுள்ள இந்தியா, 2020ல், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யூரோ மண்டல பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டால், அம்மண்டலப் பொருளாதாரம், 0.6 சதவீதம் மட்டுமே சுருங்கும் எனவும், பிரச்னை தீராவிட்டால், பொருளாதாரச் சுருக்கம், 2 சதவீதம் அளவிற்கு இருக்கலாம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.தொடர்ந்த ஆய்வில், வருங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே செல்லும் எனவும், ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிய வருவதாக, மையத்தின் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
 
        ஆனால் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்பதனை அறியலாம்!!!!!!!!!!!!!!!


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கு, "மொத்த உள்நாட்டு உற்பத்தி' (ஜி.டி.பி.,) என்ற அளவீட்டு முறை மட்டும் உதவாது என, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெலிசியா ஹுப்பெர்ட் தலைமையில், ஐரோப்பாவின் 23 நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல்கள் பற்றிய ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில், 23 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 43 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

மக்கள் தங்கள் வாழ்க்கையை நல்லவிதமாக அனுபவிக்கின்றனரா என, அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஹுப்பெர்ட். இதில் "நல்லவிதமான அனுபவம்' என்பதை அவர், நல்ல மன ஆரோக்கியம் என்ற பொருளில் கூறுகிறார். மன அழுத்தம், கவலை, அதிக பதட்டம் ஆகிய மனநிலைகளுக்கு எதிரானது தான், நல்ல மன ஆரோக்கியம் அல்லது மன வளம் என அவர் விவரிக்கிறார்.

திறமை, உணர்ச்சிகளை உறுதியாகக் கையாளுதல், மன உறுதி, புரிதல், எதிர்மறையாகச் சிந்திக்காத தன்மை, நல்ல உணர்ச்சிகளை வெளிப்படுத்தல், நல்ல நட்புறவுகள், எதையும் தாங்கிக் கொள்ளுதல், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் ஆகிய 10 குணங்கள் மூலம், இந்த மன வளத்தை நாம் அறிய முடியும் என்கிறார் ஹுப்பெர்ட்.

இந்த அடிப்படையில் தான், 23 நாடுகளில் உள்ள 43 ஆயிரம் பேரிடம் பொருளாதார வளர்ச்சி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றில், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நார்டிக் நாடுகளில் உள்ள மக்கள், இந்த மன வளத்தை அதிகளவில் பெற்று முதலிடம் வகிக்கின்றனர். அதேநேரம், ஐரோப்பாவின் கிழக்கு பகுதி நாடுகளில் உள்ள மக்கள், மிகக் குறைவான மன வளத்துடன் உள்ளனர். ஆனால், உற்சாகம் என்ற குணத்தில் அவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். மொத்தத்தில் மன வளத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி நாடுகளில் உள்ள மக்கள், மன வளத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில் இந்த 10 குணங்களில், ஒவ்வொரு குணமாக ஆராய்ந்தால், ஒவ்வொரு நாடு, ஒவ்வொரு குணத்தைச் சிறப்பாக பெற்றிருக்கிறது.

பிரான்சைப் பொருத்தவரை அந்நாட்டு மக்கள் மன உறுதியில் ஐரோப்பாவில் முன்னணியில் உள்ளனர். ஆனால், தன்னம்பிக்கை, எதிர்மறையாகச் சிந்திக்காத தன்மை, நல்ல நட்புறவுகள் ஆகியவை அவர்களிடம் குறைவாக உள்ளன.

இதுகுறித்து ஹுப்பெர்ட் கூறுகையில், "மக்களின் வாழ்வைச் செழிப்பாக்க வேண்டும் என அரசியல்வாதிகள் விரும்பினால், இந்த குணங்களின் அடிப்படையிலான ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வளர்ச்சி அடையும்' என்றார்.

இந்த முறையை மேற்கொண்டால்  நிச்சயம்  2020 இல் பொருளாதார வளர்ச்சியில்  இந்தியா 5 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறுவதில் மிகையில்லை.



Friday, 23 December 2011

சமையல் எரிவாயு உருளையின் (Physical Life) வின் காலவதியாகும் தேதி.


நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு வின் காலவதியாகும் தேதி எத்தனை பேருக்கு தெரியும்..

நான் எனக்கு தெரிந்த சில விழிப்புணர்வு சம்பந்தமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அந்த வகையில் இன்று சொல்ல போகும் விஷயம் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு வின் காலவதியாகும் தேதி பற்றி ...

பொதுவாக நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு இல் மேல மட்டமாக மூன்று தண்டுகள் இருக்கும்.அதில் இரண்டு தண்டுகளில் சமையல் எரிவாயு  உருளையின் வின் எடை குறிப்பிட்டிருக்கும்.மூன்றாவது தண்டில் சமையல் எரிவாயு உருளையின் காலவதியாகும் தேதி குறிப்பிட்டிருக்கும்.

எடுத்துக் காட்டாக. A -16

A என்பது முதல் காலாண்டு ..மார்ச் மாதம் வரையில்

B என்பது இரண்டாம் காலாண்டு ..ஜூன் மாதம் வரையில் 

C என்பது மூன்றாம் காலாண்டு ..செப்டம்பர் மாதம் வரையில் 

D என்பது நான்காம் காலாண்டு ..டிசம்பர் மாதம் வரையில் 

அதனால் A-16 என்பது ..A என்பது மார்ச் மாதம் வரை ,16 என்பது 2016 

2016 மார்ச் மாதம் தான் இதன் காலவதியாகும் தேதியை குறிக்கிறது. 

மக்களே உங்கள் வீட்டில் வரும் சமையல் எரிவாயு உருளையின் காலவதியாகும் தேதியை பார்த்து வாங்குங்கள்.இல்லையென்றால் விபதுக்கள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..

இந்த வருடம் 2011 ..உங்கள் சமையல் எரிவாயு உருளையின் தண்டில் C-11 என்று இருந்தால் திருப்பி அனுப்பி விடுங்கள்.. Kindly pass this on,
for creating awareness.

Read and Share..

Thursday, 22 December 2011

முல்லைப் பெரியாறு: எல்லா அணைகளையும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்;

முல்லைப் பெரியாறு: எல்லா அணைகளையும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர
வேண்டும்; பிரதமருக்கு அப்துல்கலாம் கடிதம்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, சில ஆலோசனைகளை தெரிவித்து
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அப்துல்கலாம் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு
மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு,
இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். முல்லைப்
பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில்,
தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.

அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், தமிழக மக்களுக்கு கூடுதல்
தண்ணீரும், கேரள மக்களுக்கு கூடுதல் மின்சாரமும் கிடைக்கும். அணையின்
பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின்
கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க
வேண்டும். அமெரிக்கா உள்பட பல நாடுகளில் அணை கட்டுவது முதல், அதை
கட்டுப்படுத்தி பராமரிப்பது வரை அனைத்து பணிகளையும் ராணுவமே மேற்கொண்டு
வருகிறது. இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த
பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டு விடக்
கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை
நாட்ட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Read and Share

பகவத் கீதைக்கே பங்கமா?


இந்துக்கள் எத்தனை பேர் வீட்டில் பகவத் கீதை வைத்துள்ளனர்? கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கூட பகவத் கீதையை படிப்பதில்லையே ஏன்?

முஸ்லீம்களும் கிறித்தவர்களும் கடவுளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களின் மத நூலான பைபுளுக்கும்,குர்-ஆனுக்கும் கொடுக்கின்றனர். ஆனால் முக்குக்கு முக்கு கோவில் கட்டி பக்தியினை வெளிப்படுத்தும் இந்துக்கள் மட்டும் ஏன் மத நூல்களை மதிக்க தவறுகிறோம்?

சென்னையிலே ரெங்கனாதன் தெருவினிலே கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள் என்ன வென்று பார்த்தால் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை தான்..... அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோத ஒரு ஈ,காக்கா கூட இல்லாத வெறிச்சோடி நிலையில் இந்த கடை மட்டும் காட்சி அளித்தது.

எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்து மதம்? பகவத் கீதை வெறும் மத உரை அல்ல.அது இந்தியர்களின் சிந்தனை பற்றிய ஆய்வுத் தொகுப்பு. நமது மாபெரும் நாகரீகத்தின் ஆன்மாவை விளக்கக் கூடியது. இவ்வளவு விலை மதிப்பற்ற புனித நூலை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

இப்படி இருக்கப் போய் தான், இன்று ரஷ்யா நமது பகவத் கீதை தீவிரவாத செயலை ஊபதேசிக்கிறது எனவே அடியோடு பகவத் கீதையை ஒழிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இன்று புனித நூலை நம்மிடம் இருந்து பிரிக்கும் ரஷ்யாவுக்கு நம் இந்து மதத்தையே அழிக்க எவ்வளவு நாள் ஆகும்? விழித்துக் கொள்ளுங்கள்..

Tuesday, 20 December 2011

முல்லைப் பெரியாறு அணை ஓர் அலசல்


"116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்

எவ்வளவு நாள் தாங்கும் ?


கேரளா சொல்வது போல்

இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.

ஏற்கெனவே முதல் தடவையாக 1933ல்

40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே

செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்

உள் செலுத்தப்பட்டது.


2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -

நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -

லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,

கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்

கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -

ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையை போல்,

கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்

அணையே உருவாக்கப்பட்டு விட்டது.



பெரியாறு அணையின் வரலாறு தெரியுமா?


பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.

அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்

சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக

கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்

வரையரைக்குள் தான் இருந்தது)

எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்

இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு

பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை

999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு

ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த

அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்

கட்டி முடித்தனர்.


இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்

அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது

தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு

சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.

ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.

அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !


இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.

இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –

சுமார் 2,08,000 ஏக்கர்.

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய

4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்

பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்

இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.

இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்

பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்

பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.


பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?


கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,

இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்

மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்

ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.


பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே

15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை

தான் பயன்படுத்த முடியும்.

(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)


ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.

கொள்ளளவு 70 டிஎம்சி.

பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது

நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்

பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்

நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி

நிரம்பவே இல்லை.


அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -

பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற

குரல் -கூக்குரல்.

சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.

அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்

மக்கள் செத்துப் போவார்கள். எனவே

உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !


புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?

மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,

நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக

இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.


சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !

அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு

தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே

என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.


அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.

பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து

2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து

மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக

தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.


புதிய அணையை கட்டப்போவது 1853 அடி

உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து

தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.

நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்

பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ

மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -

மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி

வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு,

இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்

திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து

ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய

நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.

எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி

இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக

கிடைக்காது.


புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -

புரிகிறது.


ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -

எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.

35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -

பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?


முதலாவதாக -

பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -

மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -

நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்

வந்தடையும்.

பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்

(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,

நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு

உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய

போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.

வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி

இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு

அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்

ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து

தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !

எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்

என்கிற பேச்சே அபத்தமானது.


இரண்டாவதாக -


1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.

1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது

என்று குரல் எழுப்பினார்கள்.

பயத்தைக் கிளப்பினார்கள்.

சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.


1999-இல் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்

அண்ணா பல்கழைக்கழக பேராசிரியர் மற்றும் கட்டிட பொறியாளர்

துறையில் வல்லுனரான சாந்த குமார் கூறுகையில் இன்னும்

200 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் ஆற்றலுடையது பெரியாறு

அணை என்றார்.


இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,

சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை

என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -

156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்

என்று அனுமதியே கொடுத்தது.


விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?

மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,

கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்

இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி

விட்டார்கள்.


மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.

இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்

பரிசீலனையில் இருக்கும்போதே -

தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக

இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்

ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை

கட்ட வேண்டும் என்று.


பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.

பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.

உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

பந்த் நடத்துகிறார்கள்.

இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்

கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயமஐ

இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.


உண்மையில் சொல்லப் போனால் பெரியாறு அணையில்

நொடிக்கு 45 லிட்டர் தண்ணீர் மட்டுமே வீணாகி வருகிறது

இது ஐந்தில் ஒரு பங்கு தான்.இதனால் அணைக்கு எந்த பாதிப்பும்

வராது. நொடிக்கு 250 லிட்டர் தண்ணீர் வெளியேறினால் தான்

அணை உடைவதற்கு வாய்ப்புண்டு. இதனை சிந்தித்து பாருங்கள்.


இந்தியா-பாகிஸ்தான் போன்று இன்று தமிழகம்-கேரளா

மாறிவருவது எந்த விதத்தில் நியாயம்? நாம் அவர்களின்

தொழில் நிலையங்களை மூடி வருவதும், அவர்கள்

தமிழர்களை அகதிகளாக துறத்தி விடுவதும் அதோடு மலைக்குச்

செல்லும் ஐயப்ப பக்தர்களை தரிசனம் செய்ய விடாமல்

பாதி வழியிலே மறித்து திருப்பி அனுப்புவதும் நியாயமான

செயலா?


இதற்கு இடையே "டேம் 999" படம் வேறு.

இந்த படத்தினைப் பாராட்டி கேரள அரசு இயக்குனருக்கு

விருதுகள் வேற வழங்கியுள்ளது.


ஏன் இந்த கொலவெரி???????

இதற்கெல்லாம் தகுந்த தீர்ப்பை பாராளுமன்றம் விரைவில்

எடுக்க வேண்டும்...

இல்லையென்றால் அணை உடைந்து மக்கள் அழிவதற்குள்

இரண்டு மாநில மக்களும் சண்டையடித்தே அழிந்து விடுவர் போல.



Monday, 19 December 2011

தங்கத்தை இழந்து கொண்டிருக்கும் தமிழகமே


         தங்கம் என்றதும் இன்றைய நிலையில் ஆபரணத்தங்கம் தான் அனைவரின் சிந்தனையையும் எட்டும், ஏனெனில் எது உயரத்தில் இருக்கிறதோ அதனையே நமது சிந்தை முதலில் நினைவூட்டும். ஆனால் நான் கூற வந்த கருத்து,  நாம் இழந்து கொண்டிருக்கும் தங்கப் பதக்கங்களைப் பற்றி தான். இதுவரை எத்தனை தங்கப் பதக்கங்களை ஒலிம்பிக்கில் தமிழகம் வென்றிருக்கிறது? கைவிரல் விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் .அதுவும் இரட்டையர் பிரிவில் தான் அந்த தங்கத்தையும் தட்டிச் சென்றிருப்போம். அப்படியென்றால் விளையாட்டு வீரர்களே இந்த தமிழகத்தில் கிடையாதா? நிச்சயம் அப்படி இல்லை.

    ஒரே ஒரு காரணம் தான், விளையாட தேவையான மைதானங்களும் அதற்கான வாய்ப்பும் இல்லாத ஒரே காரணத்தினால் எத்தனையோ விளையாட்டு வீரர்களை நமது தமிழகம் முளையிலே முடக்கிப்போட்டு விடுகிறது.  அண்டை மாநிலமான கேரளாவில் கூட பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு பெண் சாதித்துள்ளார். இன்றும் ஓட்டப்பந்தயம் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வரும் "பீடி உசா" தான் அந்த கேரளத்து வீராங்கனை.


    இன்றைய நிலையில் தமிழகத்தில் எத்தனை அரசு பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன?  தற்போது ஆங்காங்கே முளைத்து வரும் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளின் நிலையோ இன்னும் மோசம். இன்றைய பல சி.பி.எஸ்.சி-களும் மெட்ரிக் பள்ளிகளும் அடுக்குமாடி கட்டிடங்களாகவே முடிந்து விடுகின்றன. அதில் எங்கே அமைப்பது மைதானங்களை?


    எத்தனை பீடி உசாவையும், மல்லேஸ்வரியையும் அர்ஜீன் சிங்கையும் நமது தமிழகம் இழந்து விட்டது தெரியுமா?  முதலில் படிப்புடன் சேர்ந்து விளையாட்டையும் கற்றுக் கொடுங்கள். மாணவர்களுக்கு வி்ளையாட்டுடன் சேர்த்து கொடுக்கப்படும் கல்வியே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். அதோடு ஒபேசிட்டி(உடல் பருமன்) என்ற பிரச்சனையால் இன்றைய நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே படித்துக் கொண்டிருப்பதால் இவர்களுக்கு உடல் பருமனும் ஆர்வமும் குறைந்து விடுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


ஆகவே தமிழகத்திற்கு தங்கப் பதக்கங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து செயலாற்ற வேண்டும்.


Thursday, 15 December 2011

சமூகம் வேண்டுமா இல்லை சமூக வலைதளம் வேண்டுமா?

     அவசர உலகில் காலை முதல் இரவு வரை நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு நமது அண்டை வீட்டில் உள்ளோரிடம் பேசி சிரிக்க கூட நேரம் இருக்காது. அதிலும்,  இன்னும் சிலருக்கு அண்டை  வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  இப்படிப்பட்டவர்கள் சூரியனை காணாது சென்று விட்டு சந்திரனை பார்க்கவே வீடு திரும்புவார்கள்.  அப்படிப்பட்டவர்களுக்கு இணையத்தை திறந்தாலே சமூக வலைதளங்களின் நண்பர்கள் கூட்டம் அலைமோதும்.

     அண்டை வீட்டில் உள்ளவனுடனே பழகத்  தெரியாதவன் எல்லாம் அயல்நாட்டு காரர்களுடன் பழகுகிறான். இப்படி பட்ட மக்களால் எப்படி நம் சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்? ..... சமூக வலைதளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் நம் சமூகத்தின் மேல் காட்ட மறுக்கிறோம்? .....
இன்றைக்கு இணையத்தில் தகவல்களை தேடுபவர்களை விட சமூக வலைதளங்களில் அரட்டை அடிப்பவர்கள் தான் அதிகம்.

      உதாரணமாக, சாலையில்  சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் ஒருவருக்கு காயமடைந்து இருக்கும், அவரை சுற்றி நிற்கும் கூட்டத்தில் நாமும் ஒருத்தராய் நிற்போம். ஆனால் அவரை யார் என அறியாதவராய் இருக்கும் நமக்கு அப்போது தான் தெரியும் நமது வீட்டுக்கு அருகாமையில் இருப்பவர் தான் விபத்தில் சிக்கித்தவித்தவர் என்று. இந்த நிலையில் நமது சமுதாயம் சென்று கொண்டிருந்தால் நாளை எந்த சமூக வலைதளமும் வந்து நம்மை காப்பாற்ற போவதில்லை. நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்  என்ற அறியாமையில் மிதந்து கொண்டிருக்கிறோம், உண்மையில் நாம் நம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறோம்.

      நம்முடைய முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுக்கள், திருவிழாக்கள், கும்மாளங்கள் எல்லாமே இன்று இணையத்தில் தனி நபராய் உயிரற்ற தட்டச்சுடன் பேசி மகிழ்வதில் கிடைக்குமா? நிச்சயம் இல்லை. பொழுதுபோக்கிற்காக நாம் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பது தவறல்ல , அதே சமயத்தில் அடுத்த மாநிலத்தை பற்றி அறியாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை, நம் அண்டை அயலாருடன் ஆவது முடிந்த அளவு நட்பு பாராட்ட பழகி கொள்ளுங்கள் . "ஊருடன் கூடி வாழ்" என்று  நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லி சென்றார்கள்?



 
 
 
 
 
    



 


 

 


பாலிதீன் பைகளை ஒழிக்க இப்படியும் ஒரு வழியா?


      பாலிதீன் பைகளை ஒழிக்க எவ்வளவோ வழிமுறைகளை நாமும் செயல்படுத்தி வந்தோம். ஆனால் எதுவுமே நிரந்தரமாகவில்லை அனைத்து கடைகளிலும் பாலிதீன் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்த மாநில அரசே பாலிதீன் பைகளின் உபயோகத்தை தவிர்க்க முடியாத காரணத்தினால்  நடைமுறைப்படுத்திய சட்டத்தையே பாதியில் கைவிட்ட அவல நிலை தான் மிச்சம். பாலிதீன் பை ஒழிப்பு பற்றி எத்தனையோ விழிப்புணர்வுகளை மக்களிடம் எடுத்துக் காட்டியும் பலனில்லாத நேரத்தில் தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிமுகப் படுத்திய  புதிய பாலிதீன் ஒழிப்பு முறை என்ன தெரியுமா?  
    சாலை அமைக்க தார் காய்ச்சும் போது அதனுடன் பாலிதீன் பைகளையும் சேர்த்து தார்     காய்ச்சி சாலை அமைத்து வருகின்றனர். இதன் மூலம் சாலை வலுவாகவும், தண்ணீர் தேங்காமலும் இருப்பதோடு பாலிதீன் பையினையும் ஒழிக்க முடிகிறது. பல இடங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். பாலிதீன் பைகளை ஒழிக்க இப்படியும் ஒரு வழியா?  

    இதனால் மண் வளம் பாதிக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் , மண்ணில் தேங்கி மண்ணை மட்க விடாமல் பண்ணும் பாலிதீன் பைகளுக்கு மத்தியில் இது எவ்வளவோ மேலானது தான். ஆகவே பாலிதீன் பைகளை உபயோகப் படுத்தும் நாம் அதை கண்ட இடங்களில் எறியாமல் பாலிதீன் பைகளுக்கென அனைத்து தெருக்களிலும் தனியாக உள்ள குப்பைத் தொட்டிகளில் அதை சேமித்து வந்தால் அவைகள் சாலை அமைப்பு போன்ற நல்ல ஆக்க கூறுகளுக்கு பயன்பட வாய்ப்புள்ளது.


    அரசாங்கம் முற்றிலுமாக பாலிதீன் பைகளை ஒழிக்க சட்டமியற்றியதால் அது பாதியிலேயே கைவிடப்பட்டது. படிப்படியாக கொண்டு போயிருந்தால் எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்கலாம் என்பது மட்டும் நிதர்சன உண்மை. முதலில் அனைத்து தெருக்களிலும் மட்கும் குப்பை , மட்காத குப்பை என இரு வேறு குப்பைத் தொட்டியினை வைத்து அதற்கேற்ப அனைவரும் பயன்படுத்த வேண்டும் என சட்டம் பிறப்பித்தாலே மக்களை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

ஒரே நேரத்தில் எதையுமே முற்றிலும் ஒழிக்க முடியாது என்பது உண்மை தான்... படிப்படியாக பாலிதீன் பைகளின் சாம்ராஜ்ஜியத்தை ஒழிப்போம்……………..  நாளைய சமுதாயம் செழித்து விளங்க இன்றைக்கே நாம் அடிக்கல் நாட்டிடுவோம்.

Friday, 9 December 2011

மயக்கமென்ன திரைப்படத்தை விமர்சிப்போமா?


இயக்குனர் செல்வராகவன் ஆடியன்சின் மனநிலையை யோசிக்காமல் காட்சிகளை படமாக்கியுள்ளார். தேவையில்லாத இடங்களில் பாடல் காட்சிகள் இடம் பெற்றதும் படத்தில் ஒரு மணி நேரத்திற்கு அப்புறம் தான் கதாநாயகியே இவர்கள் தான் போல என அறிந்து கொள்ளும்படியுமாகவும் ,காமெடியே இல்லாமலும், அதிரடி சண்டைக்காட்சிகள் இடம் பெறாமல் இருந்ததுமே ஆடியன்சிற்கு படத்தின் மேல் சுவாரஸ்யம் இல்லாமல் போனதற்கு மிக முக்கிய காரணம்.

படத்தின் கருப்பொருள் இரண்டு. இரண்டையும் ஒன்றாய் புகுத்த நினைத்த இயக்குனர் செல்வராகவனுக்கு இது ஒரு தலை குனிவு தான்.

முதல் கருத்து தனுசின் வாழ்க்கை குறிக்கோளான புகைப்படக் கலைஞர் தான். இறுதியில் மிக அசத்தலாக தனுசினை உயரத்தில் காமித்த இயக்குனர் செல்வராகவன், இரண்டாம் பகுதியில் கதையினை  ஆடியென்சுக்கே பிடிக்காத நிலையில்  இழுத்திருப்பது படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.


இரண்டாவது கருத்தாக "லிவிங் டு கெதர்" முறையில் கதாநாயகியை அறிமுகப்படுத்தியதால் தான், கதாநாயகியை அறிந்து கொள்ளவே ஆடியன்சுக்கு மிகுந்த நேரம் ஆகி விட்டது. நண்பனுக்காக தன் காதலியை விட்டுக் கொடுத்த நண்பன் அவர்களின் கல்யாணத்திற்கு பின்னரும் இயல்பாக நடந்து கொள்வது நடைமுறைக்கு சாத்தியமானதாக அமையவில்லை.


அதோடு தனுசிற்கு மனநலம் குன்றிய சமயத்தில் இன்னொரு நண்பன்தவறான எண்ணத்தோடு கதாநாயகியிடம் பேசுவது பார்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் படியாக உள்ளது. ஆண் சமூகத்தையே தவறான எண்ணத்துடன் காட்ட முயற்சித்ததைப் போன்று உள்ளது. அதோடு பளிச்சென்று சில காட்சிகளை வெளிப்படையாக காமித்திருந்தது பார்வையாளர்களை தலை குனிய வைக்கிறது.   


இயக்குனர் செல்வராகவன் சொல்ல வந்த கருத்து சூப்பர். ஆனால் சொல்ல வந்த விதம் தான் சற்று கோணலாகி விட்டது.  தனுஸ் தன் வாழ்க்கை குறிக்கோளாக நினைத்த புகைப்பட கலைஞராக வர முடியாததால் அதன் நினைவாகவே மன நோய்க்கு உட்பட்டு மீண்டும் தன் மனைவி மூலம் உயர்ந்த நிலையை அடையும் படியாக காட்டப்பட்ட காட்சிகள் மிகுந்த அருமை. ஒரு நல்ல மனைவியின் குணநலத்தையும், தன் இலட்சியத்தை அடையும் வரை அதையே நினைத்துக் கொண்டிருந்த தனுஸின் கதாபாத்திரத்தையும் காமித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்..........


விளம்பரங்களில் கூட பாகுபாடா?

ஒருவன் புதிதாக ஒரு கடையோ அல்லது தொழிலோ தொடங்குகிறான் என்றால் அதை
விளம்பரப் படுத்துவதற்கு அவனால் இயன்ற அளவுக்கு விளம்பரத்தாள்களை
அச்ச்சடித்து மக்களிடம் விநியோகிப்பான். ஆனால் அந்த விளம்பரத்தாளை
மதித்து வாங்கி படிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர் நம்மிடையே?
அவர்கள் கொடுக்கும் விளம்பரத்தாள்களை வாங்கிக் கொண்டு அவர்கள்
கண்முன்னே விட்டெரியும் சமுதாயம் அல்லவா நம் சமுதாயம். இன்னும் சிலர்
அந்த விளம்பரத்தாள்களை பலகாரங்கள் வைத்து சாப்பிட பயன்படுத்துகின்றனர்.
விளம்பரத்தாள்களை விநியோகம் செய்தவன் இறுதியில் அந்த இடத்தை விட்டு இடம்
பெயரும் போது கவனித்தால் அவனது கால் தடம் முழுவதும் அவன் விநியோகித்த
விளம்பரத்தாள்கள் தான் அவனுக்கு சிவப்பு கம்பளமாய் தோற்றமளிக்கும்.

பணம் மிகுந்தோர்கள் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துகிறார்கள், ஆனால்
அவைகளுக்கு மதிப்பளிக்கும் நாம் ஏன் விளம்பரத்தாள்களை மட்டும் மதிக்காமல்
பாகுபாடு காண்பிக்கிறோம். நாம் எதிர்பார்க்கும் சில செய்திகள் கூட நமக்கு
விளம்பரத்தாள்களின் வாயிலாக கிடைக்கலாம், ஆனால் நாம் அதை ஒரு நொடி கூட
பார்க்காமல் கீழே போடுவது தலை குனிவு தான்.அவர்களின் உழைப்புக்கு
மதிப்பளித்து ஒரு நிமிடம் வாசித்ததும் கூட கீழே போடலாமே ! சிறிய
விசயங்களில் நம்மை நாமே திருத்திக் கொள்ள பழகுவோம்.