பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணக்கார வீட்டில் சம்பந்தம் முடிக்க விரும்புவர். அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது தான். ஆனால் வசதி இருந்தால் மட்டும் நாம் நினைக்கும் வசந்தமான வாழ்க்கை வந்து விடுமா என்ன? வசதி படைத்த வீட்டில் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா? ஏனெனில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பரம்பரை பணக்காரராக இருப்பார், அவரது முன்னோர்கள் பரம்பரையாக பரம்பரையாக சொத்து சேர்த்து வைத்துவிட்டு மறைந்திருப்பர். அவர்களுக்கென்று எந்த தேவையும் இருக்காது.உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற நிலையும் கிடையாது.என்ன பொருள் வேண்டும் என்று நினைத்தாலும் எல்லாமே வீட்டுக்குள் வந்து விடும்.
இவர்களுக்கு ஒரு சமயத்தில் வாழ்க்கையே போரடித்து விடும். தேவையானவை எல்லாமே நம்மிடத்தில் இருக்கும் தருணத்தில் வாழ்க்கையில் நமக்கு சவால்களே இல்லாமல் போய் விடுகிறது. கொஞ்ச நாட்களிலேயே வாழ்க்கை போரடித்து விடுகிறது. இது மனோதத்துவ அடிப்படையில் கண்டறியப்பட்ட உண்மை, நம்முடைய தேவைகள் அனைத்தும் அருகிலேயே இருக்கும் தருணத்தில் நாம் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சோம்பேறிகளாய் வாழ்க்கையை ரசிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்று விடுகிறோம்.
சரி, ஒரு மிடில் கிளாஸ் தம்பதியினரின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என பார்ப்போம்!
இவர்கள் தான் புதிதாக விதைக்கப்பட்ட விதைகள் இவர்கள் வளர்ந்து கிளை,இலை விட்டால் மட்டுமே நல்ல மரமாக வளர முடியும். இவர்களுக்கென்று
எந்த பரம்பரை சொத்தும் இருக்காத நிலையில் அவர்களே உழைத்து சேர்க்க வேண்டிய நிலையில் இருப்பர். உண்மையில் இது மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்....
கணவன் மற்றும் மனைவியின் ஒவ்வொரு மாத சம்பளத்திலும் ஒரு தொகையை சேமித்து வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் வாங்கி மகிழ்வதோடு அவர்கள் உழைப்பால் கிடைத்த அந்த பொருளோடு வாழ்கிற ஒரு பரிபூரண சந்தோசம் கிடைக்கும். மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ வெளியே உல்லாசப்பயணம் சென்று வருவது, இது போன்ற மிடில் கிளாஸ் குடும்பங்களின் சந்தோசங்களுக்கு அளவேதும் இல்லை. அடுத்த மாதம் எங்கே போகலாம் என இந்த மாதமே திட்டமிட்டு வைத்திருக்கும் மிடில் கிளாஸ் தம்பதியினரின் எதிர்பார்ப்புக்கும் அவர்களது வாழ்க்கை சுவாரஸ்யத்திற்கும் மிகை ஏதும் இல்லை.
அப்படியானால் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் மட்டும் தான் சந்தோசம் வருமா? நான் அப்படி சொல்லவில்லை. இன்றைய நிலையில் பெரும்பான்மையானோர் பணக்கார வாழ்க்கை தான் வேணும் அதில் தான் வசந்தம் இருப்பதாக நினைக்கின்றனர். அது தவறான எண்ணம் என சுட்டிக்காட்டவே இந்த கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று.
நம்மில் பலர் வாழைப்பழ சோம்பேறிகளாக இருப்பர், உழைக்காமலே நமக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என நினைப்பர். அப்படிப்பட்டவர்கள் தான் பணக்கார வாழ்க்கையை தேடி போகிறார்கள்.. நாம் நினைத்த பணக்கார வாழ்க்கையை அடைந்ததும், கொஞ்ச நாட்களிலேயே அலுத்துப் போகும் வாழ்க்கையால் மன அழுத்த நோய்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர். உலக சுகாதார கணக்கெடுப்பின் படி 2010 ஆண்டு முடிவில் இருத நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்க்கையை அலுப்புடன் வாழ்ந்தவர்கள் தான்.
நமது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் சுவாரஸ்யத்துடனும் சந்தோசமாகவும் ஏற்றுக் கொண்டு வாழப் பழகுவோம் அது எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் நம்மால் இனிமையான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment