ஒருவர், தனக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் இலக்காக இருக்கிறது. சிலரைத் தவிர, வாழ்க்கையில் காதலிக்காமல் யாருமே இருந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும்.
எப்படி வந்தது:காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். மத நம்பிக்கைக்காக உயிரை துறந்த துறவிகளின் நினைவை போற்ற வேலன்டைன் தினம் தோன்றியதாக கருதப்படுகிறது. எனினும் இந்த கதை 14ம் நூற்றாண்டில் மாறியது. ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர்க் களத்திற்கு அழைத்தார். அழைப்பிற்கு வரவேற்பில்லாததால், அவர்களின் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், இதற்கு மாறாக வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார் எனவும், ஆத்திரமடைந்த அரசன், அவருக்கு மரண தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. பின் அவரது நினைவுநாளையே வேலன்டைன் தினமாக இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தான் வேலன்டைன் தினம் முழுவதுமாக காதலர் தினமாக மாறியது.
காதலருக்கு பிடித்த இடம் எது: காதலர்களுக்கு பிடித்த இடமாக இந்தியாவில் கோவாவும், உலகளவில் பாரீசும் உள்ளன. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "ஸ்கைஸ்கேனர்' என்ற டிராவல் அமைப்பு இந்தியாவில் உள்ள காதலர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 850 பேர் இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். உள்நாட்டில் காதலர்கள் செல்ல விரும்பும் இடமாக கோவாவுக்கு 28 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். அடுத்தபடியாக அந்தமான் தீவுகள் (14 சதவீதம்), ஆக்ரா (9 சதவீதம்), கேரளா (8 சதவீதம்) , சிம்லா (8 சதவீதம்), மணாலி, டார்ஜிலிங், ஊட்டி, குல்மார்க், கூர்க் ஆகியவை உள்ளன. இந்திய காதலர்கள், வெளிநாடுகளில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் (24 சதவீதம்) செல்வதையே அதிகம் விரும்புகின்றனர். அடுத்த இடங்களில் வெனிஸ் (இத்தாலி), லாஸ் வேகாஸ் (அமெரிக்கா), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), ரோம் (இத்தாலி), ஹவாய் (அமெரிக்கா), நியூயார்க் (அமெரிக்கா), மாலே (மாலத்தீவு), புகாட் (தாய்லாந்து), பாலி (இந்தோனேஷியா) ஆகிய நகரங்கள் உள்ளன.
எதிர்ப்பை மீறி:காதலர் தினம் என்பது மேற்கத்திய பண்பாடு , வியாபார நோக்கங்களுக்காக வர்த்தக நிறுவனங்கள், இத்தகைய கலாசாரத்தை இந்தியாவிலும் பரப்புகின்றனர், எனவே அதை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மைசூரு உள்ளிட்ட சில இடங்களில் காதலர்கள் மீது தாக்குதல்கள் சம்பவங்களும் நடந்தன. இருந்தாலும் காதல் என்றாலே எதிர்ப்பு தான். அது போல, காதலர் தினமும் பல எதிர்ப்புகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது.
0 comments:
Post a Comment