கடந்தாண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாதது குறித்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கடந்தாண்டில், 90 நாடுகளில் மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் நேற்று "உலக அறிக்கை 2012' என்ற பெயரில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவைக் குறித்து அந்த அமைப்புக் கூறியிருப்பதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விஷயத்தில் கடந்தாண்டு ஏமாற்றமே அளிக்கிறது. விசாரணைக் காவல் சாவுகள், போலீஸ் அத்துமீறல்கள், விளிம்பு நிலை மக்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை அமல்படுத்துவதில் தோல்விகள் என, கடந்தாண்டு அவநம்பிக்கையையே அளிக்கிறது. ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என, அரசியல் தலைவர்களும், ஆலோசகர்களும் கூறிய போதும் அவற்றைப் புறக்கணித்து இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், காஷ்மீரில் கடந்தாண்டு வன்முறைகள் குறைந்துள்ளன. குற்றம் செய்த வீரர்களை விசாரிப்பது, போலீஸ் துறையில் சீர்திருத்தம், சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது போன்றவற்றில் இந்தியா போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றிருந்தும், தனது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய வாய்ப்புகளைத் தவற விட்டது. வெளிநாடுகளில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கும் தலைமை வகிப்பதற்கு, இந்த இரு அமைப்புகளில் உள்ள தனது உறுப்பினர் அந்தஸ்தை சரியான முறையில் பயன்படுத்த இந்தியா தவறி விட்டது. அதேநேரம், சிரியா போன்ற நாடுகளில் நிகழ்ந்த கொடூரங்கள் விஷயத்தில் இந்தியா மவுனமாகவே இருந்துவிட்டது.
0 comments:
Post a Comment