தங்கம் என்றதும் இன்றைய நிலையில் ஆபரணத்தங்கம் தான் அனைவரின் சிந்தனையையும் எட்டும், ஏனெனில் எது உயரத்தில் இருக்கிறதோ அதனையே நமது சிந்தை முதலில் நினைவூட்டும். ஆனால் நான் கூற வந்த கருத்து, நாம் இழந்து கொண்டிருக்கும் தங்கப் பதக்கங்களைப் பற்றி தான். இதுவரை எத்தனை தங்கப் பதக்கங்களை ஒலிம்பிக்கில் தமிழகம் வென்றிருக்கிறது? கைவிரல் விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் .அதுவும் இரட்டையர் பிரிவில் தான் அந்த தங்கத்தையும் தட்டிச் சென்றிருப்போம். அப்படியென்றால் விளையாட்டு வீரர்களே இந்த தமிழகத்தில் கிடையாதா? நிச்சயம் அப்படி இல்லை.
ஒரே ஒரு காரணம் தான், விளையாட தேவையான மைதானங்களும் அதற்கான வாய்ப்பும் இல்லாத ஒரே காரணத்தினால் எத்தனையோ விளையாட்டு வீரர்களை நமது தமிழகம் முளையிலே முடக்கிப்போட்டு விடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் கூட பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு பெண் சாதித்துள்ளார். இன்றும் ஓட்டப்பந்தயம் என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வரும் "பீடி உசா" தான் அந்த கேரளத்து வீராங்கனை.
இன்றைய நிலையில் தமிழகத்தில் எத்தனை அரசு பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன? தற்போது ஆங்காங்கே முளைத்து வரும் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளின் நிலையோ இன்னும் மோசம். இன்றைய பல சி.பி.எஸ்.சி-களும் மெட்ரிக் பள்ளிகளும் அடுக்குமாடி கட்டிடங்களாகவே முடிந்து விடுகின்றன. அதில் எங்கே அமைப்பது மைதானங்களை?
எத்தனை பீடி உசாவையும், மல்லேஸ்வரியையும் அர்ஜீன் சிங்கையும் நமது தமிழகம் இழந்து விட்டது தெரியுமா? முதலில் படிப்புடன் சேர்ந்து விளையாட்டையும் கற்றுக் கொடுங்கள். மாணவர்களுக்கு வி்ளையாட்டுடன் சேர்த்து கொடுக்கப்படும் கல்வியே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். அதோடு ஒபேசிட்டி(உடல் பருமன்) என்ற பிரச்சனையால் இன்றைய நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே படித்துக் கொண்டிருப்பதால் இவர்களுக்கு உடல் பருமனும் ஆர்வமும் குறைந்து விடுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
ஆகவே தமிழகத்திற்கு தங்கப் பதக்கங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து செயலாற்ற வேண்டும்.
0 comments:
Post a Comment