சிலர் எந்த
நேரமும் ஏதோ ஒரு யோசனையில் இருந்து கொண்டே இருப்பார்கள். அப்படி என்ன தான் யோசனை செய்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்,
கடந்த கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.அதனால் என்ன இலாபம்? நிச்சயம் நமக்கு நஷ்டம் மட்டுமே.
கடந்த கால நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பதால் நாம் நிகழ்காலத்தை
இழந்து கொண்டிருக்கிறோம்.
மாணவர்களில் சிலர் புத்தகத்தை விரித்து
வைத்துக்கொண்டு நீண்ட நேரமாக ஒரே பக்கத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள். என்னடா எவ்வளவு நேரமா இந்த ஒரே பக்கத்தை படிப்ப என சக தோழர்கள் சொன்னால் தான்,
இவன் நிகழ்காலத்துக்கே வருவான், இல்லடா மனப்பாடமே
ஆக மாட்டேங்குது-டா என்று கூறி சமாளித்துவிடுவான். ஆனால் அதன் பின் ஒளிந்திருக்கும் உண்மை என்ன வென்று பார்த்தால் அந்த மாணவன்
புத்தகத்தை திறந்து வைத்ததோடு சரி அவனுடைய நினைவுகள் வேறு எதையோ சுற்றி வலம் வந்து
கொண்டிருக்கும்.
பள்ளி மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால்
சற்று வேடிக்கையாக இருக்கும். இராகம் போட்டுக் கொண்டு கத்தி கத்திப்
படிப்பார்கள். ஒரு தடவை வாசித்ததும் அப்படியே வரிமாறாமல் ஒப்புவிக்கும்
திறன் சில மாணவர்களிடம் மட்டுமே இருக்கும். இன்னும் சிலர் பலமுறை
வாசித்து மனனம் செய்தாலும் சரியாக ஒப்புவிக்க மாட்டார்கள். இவர்களுக்கு
மனப்பாட சக்தி குறைவா? நிச்சயம் இல்லை. முழுநினைவோடு இவர்கள் நிகழ்காலத்தைப் பயன்படுத்தவில்லை. வீட்டிற்கு போனதும் அம்மா என்ன சிற்றுண்டி செய்து வைத்திருப்பார்கள்,
நேற்று நடந்த திருமதி செல்வம் நாடகத்தின் விறுவிறுப்பு இன்று எப்படி
தொடரப்போகிறதோ? இது போன்ற எண்ணங்களுடன் படித்தால் நிச்சயம் நமக்கு
பல மணிநேரம் எடுத்துக்கொள்ளும்.
கவனத்தை சிதறவிடாமல் நிகழ்காலத்தை
நெகிழ்ச்சியுடன் பயன்படுத்தினால் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திடலாம். மனதை ஒரு நிலைப்படுத்த அதிகாலையோ அல்லது மாலை வேளையோ சிறிது நேரம் தியானம்
செய்யுங்கள்.
0 comments:
Post a Comment