நடுப்பகல் பன்னிரெண்டு மணி மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டடது. வீட்டிற்குள் இருக்க முடியவில்லை சிவா-வுக்கு, அப்படியே சன்னல் கதவுகளை மெல்ல திறந்தான் கடற்கரைக்காற்று அவனை இழுத்துச் சென்றது. கடலை பார்த்த ஆனந்தத்தில் அடுத்த நொடியே சிவா கடற்கரையில் இருந்தான். கடற்கரையில் நின்ற சிவாவின் கால்களை கடல் அலைகள் முத்தமிட்டுச் சென்றன. கடல் அழகை ரசித்துக்கொண்டிருந்த சிவா தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நீரில் நீந்தத் தொடங்கினான்.
கடலின் உள்ளே அலங்கார மீன்கள் அழகாய் நடனமாடிக்கொண்டிருந்தன. வண்ண மீன்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருந்தன. வண்ண மீன்களுக்குப் பின்னே பின் தொடர்ந்து சென்றான் சிவா. பவளப்பாறைகளில் போய் வண்ணமீன்களும் அலங்கார மீன்களும் தஞ்சம் அடைந்தன. இது என்ன பாறை ! என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான் சிவா. என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறாயா என பவளப்பாறை சிவாவிடம் கேட்டதும், சிவாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்ள்லை. சரி சொல்லுங்கள் என்றான் ஆர்வத்துடன் சிவா.
நாங்கள் குழியுடலி வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களின் வளர்ச்சிவீதம் 1 செ.மீ முதல் 10 செ.மீ வரை தான். நாங்கள் கடல் நீரில் உள்ள கரியமில வாயுவையும், கால்சியத்தையும் கிரகித்து அதனை கால்சியம் கார்பனேட்டாக மாற்றி ஒரு கெட்டியான சுண்ணாம்பு மட்டி போன்ற வீட்டினை உருவாக்கி கொள்கிறோம். இப்படிவங்கள் நீண்டகாலமாக படிப்படியாக வளர்ந்து பவளப்பாறைகளாக நாங்கள் உருவெடுக்கின்றோம். எங்கள் இனத்தில் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. இராமேஸ்வரத்தில் தொடங்கி தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா பகுதி தான் எங்களின் சொந்த ஊர். எங்களுக்கு “கடலின் தேவலோகம்”,”மரபியல் பூங்கா”,”நீரில் மூழ்கியுள்ள வெப்பமண்டலக்காடுகள்” என பல்வேறு புனைப் பெயர்களை மக்கள் வைத்துள்ளனர். ஏறத்தாழ 3600க்கும் அதிகமான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் இந்த மன்னார் வளைகுடா பகுதியில் தான் வசித்து வருகின்றன.
“வந்தோரை வாழவைப்பதில் நாங்களும் தமிழருக்கு இணையானவர்கள் தான்” ஆழ்கடலில் உள்ள வண்ணமீன்கள் மற்றும் அலங்கார மீன்களுக்கு அடைக்கலமே நாங்கள் தான் கொடுக்கிறோம். எங்களின் பாறை இடுக்குகளில் வண்ணமீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றனர். இது தவிர பலவித கடல்வாழ் உயிரிகள், மெல்லுடலிகள், நட்சத்திரமீன்கள், நண்டுகள் போன்றவைகளும் எங்களை நம்பியே வாழ்கின்றனர்.
இதோடு மட்டுமல்ல , நாங்கள் இந்த சமுதாயத்தையே மறைமுகமாய் காத்துக்கொண்டிருக்கிறோம். பேரலைகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களின் போது கடல்பரப்பை 21 தீவுகளாக பிரித்து கடல் சீற்றத்தை குறைப்பதில் நாங்கள் மக்களுக்கு பெரும்பங்காற்றுகிறோம். கடந்த 2004 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் நாள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகிய நாகை மற்றும் சென்னையை ஒப்பிட்டு பார்கையில், மன்னார் வளைகுடா பகுதிகள் மட்டும் சுனாமி தாக்கத்தில் இருந்து தப்பித்ததற்கு காரணமே நாங்கள் தான்……..
அதோடு , எங்கள் உடலில் உள்ள மெல்லுடலிகள் மருந்துகள் தயாரிக்க பெரிதும் உதவுகின்றன. மற்றும் எங்களின் வளர்சிதை மாற்றங்களால் வெளியேற்றக்கூடிய கழிவுப்பொருட்களில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வைரஸ்,பாக்டீரியா போன்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பத்தில் எங்களைத்தான் முழுவதுமாக பயன்படுத்துகின்றனர். மிகக்கொடிய கேன்சர் நோயையே நாங்கள் குணப்படுத்தி சாதனைப் படைத்துள்ளோம்
ஆனால் கடந்த 60ஆண்டுகளாக எங்களின் இனமே அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் 200 மீட்டர் நீளத்திற்கும் மேலான எங்களை அழித்து உள்ளனர். 1970களில் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதிகமான அழிவை சந்தித்து வருகிறோம். பெருகிவரும் மக்கள் குடியிருப்பு மற்றும் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை காரணமாக கடலோர பகுதிகளில் அதிக அளவு மாசு கலக்க தொடங்கியுள்ளது. இதுவும் எங்கள் அழிவுக்கு ஒரு காரணமாகும். நவீன கருவிகளில் மீன் பிடிப்பதன் மூலமாகவும் எங்களை அழிக்கின்றனர்.
பவளங்களுக்கு மட்டும் தான் மதிப்பு உண்டோ! ஏன்? அவை விலைமதிப்பற்ற செல்வமாதலால் அவைகளுக்கு அதிகமதிப்பு தருகிறீர்களா?அப்படியென்றால் மறைமுகமாக மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பவளப்பாறைகளையும் மதிக்கக்கற்றுக் கொள்ளுங்கள்.
மதுரை காமராசர் பல்கழைக்கலகத்தில் 1998 ஆம் வருடம் கடல் மற்றும் கடல்காவல்துறை ஆராய்ச்சி அருங்காட்சியகம் புதுமடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு பல வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான ஒரு நூலகம் பவளப்பாறை மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன.
இயந்திர உலகில், இயற்கை எழிலைப் பற்றியும் நம் பாதுகாப்பைப் பற்றியும் விழிப்புணர்வு இல்லாமல் பரபரப்பான வாழ்கையில் பறந்து கொண்டிருக்கும் இயந்திர மனிதர்களே சற்று சிந்தித்து பாருங்கள்.
0 comments:
Post a Comment